Saturday, November 05, 2005

மனத்தை அடக்குவதுதான் ...!

"மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்த குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் பொதுவாகவே சஞ்சல மனம் படைத்தவை; அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்த குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது தீராத சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததினால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லாப் பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!"
-சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்

Tuesday, October 18, 2005

காத்திருப்பது...

நீ வருவதாய்ச் சொல்லவில்லை
எனினும் காத்திருக்கிறேன்
காத்திருந்து காத்திருந்து
பழக்கமாகிவிட்டது
நீ வந்த பிறகும்
காத்திருக்கிறேன்
காத்திருந்தால்
கடவுளே கிடைத்துவிடுகிறான்
நீயா கிடைக்கமாட்டாய்?
நான் காத்திருக்கிறேன்
உனக்காக அல்ல
எனக்காக
வாழ்க்கை என்பதே
காத்திருத்தல்தான்
அந்த தெய்வீகக் காதலியைச்
சந்திப்பதற்காக!
-'இது சிறகுகளின் நேரம்'(கவிக்கோ அப்துல் ரகுமான்)

Friday, October 07, 2005

குறள்

உயரம்!
திருவள்ளுவர் ஒரு பள்ளிக்கூட இலக்கிய மன்ற விழாவுக்குப் பேசப் போனார்... ஒரு கற்பனைதான்! மாணவர்களை ஒரு கேள்வி கேட்டார்.

"தாமரைப் பூவின் உயரம் என்ன?"

ஒருவன் மற்றவனைப் பார்த்தான். அவன் அடுத்தவனைப் பார்த்தான். இது மாணவர்கள் டெக்னிக். அடுத்தவனை பார்த்துவிட்டால் கேள்வியை தூக்கி அவன் தலைமேல் போட்டதாக அர்த்தம்!

ஒரு மாணவன் உத்தேசமாக சொன்னான்: "தாமரையின் உயரம் இரண்டரை அடி".

திருவள்ளுவர் கேட்டார்: "ஏன் நாலடி இருக்காதோ?"

பளிச்சென்று பையன் சொன்னான்: "வைச்சுக்குங்க..எனக்கென்ன? அது என்ன எங்க வீட்டுத் தாமரையா? உங்க வீட்டுத் தாமரையா?".

மாணவர்களோடு சேர்ந்து வள்ளுவரும் சிரித்தார். ஆனால், "ஒருவருக்கும் உண்மை தெரியவில்லையா?" என்று வருத்தத்தோடு வினவினார்.

ஒரு புத்திசாலிப் பையன் எழுந்து சொன்னான்: "ஐயா, உங்கள் கேள்வி தவறு. தாமரைக்கு ஏது உயரம்? தண்ணீரின் உயரம், தாமரையின் உயரம். தண்ணீர் மேலே போகப் போகத் தாமரை மேலே போகும். தண்ணீருக்கு மேலே இருப்பதுதான் தாமரையின் இலட்சியம்."

திருவள்ளுவர் மகிழ்ந்து போனார்: "சபாஷ்..வாழ்க்கையில் உன்னுடைய உயரம் என்ன? "
மாணவன் சொன்னான்: "என்னுடைய உயரம் என் எண்ணத்தின் உயரம்"
வெள்ளத் தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு – குறள்

-"நல்ல வண்ணம் வாழலாம்" என்ற புத்தகத்தில் சுகி.சிவம்

Sunday, October 02, 2005

ரெளடிகளை மட்டுமல்ல

ரெளடி மரங்களையும் ஒழிக்க வேண்டும்

'மனிதரிலும் பறவை உண்டு
விலங்கும் உண்டு, கல் உண்டு
மரமும் உண்டு

மனிதரிலும் நீர் வாழும்
சாதி உண்டு அனேக குல
மனிதர் உண்டு

மனிதரிலும் மனிதர் உண்டு
வானவரும் மனிதர் போல்
வருவதுண்டு

மனிதரிலும் பிறப்பறுக்க
வந்ததுவே அருமையென
வகுத்தார் முன்னோர்' என்கிறது 'சிவானந்த போதம்'.

மனிதர்களில் தெய்வாம்சம் உள்ள ஞானிகள், அறிஞர்கள், பொதுத்தொண்டர்கள், பண்பாளர்கள் என பல வகையினர் உண்டு.
பாட்டாளிகள் பாமரர்கள், அப்பாவிகள் கூட்டமும் உண்டு.

அதே போல் பலவீனமானவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை சுரண்டி வாழும் ரெளடிகள் கூட்டமும் உண்டு.
நல்லவர்களின் எண்ணிக்கையை வைத்துதான் ஒரு நாட்டிற்க்கு மதிப்பே தவிர ரெளடிகளின் எண்ணிக்கையை வைத்து அல்ல.

ஞானிகள், அறிஞர்களை மதிக்காத நாட்டில் அவர்கள் தோன்ற மாட்டார்கள். பின் அந்த நாட்டிற்கு அழிவைத்தவிர ஆக்கம் வர வாய்ப்பேயில்லை. தமிழகத்தின் இன்றைய நிலைமைகூட இதுதான்.
மனிதர்களைப் போலவே மரங்களிலும் தெய்வாம்சம் மிக்க ஞான மரங்கள், மருந்து மரங்கள், பழ மரங்கள், பயன் மரங்கள் எனப் பலவகை உண்டு.
அரச மரம், அத்தி மரம், ஆல மரம், வேப்ப மரம், வில்வ மரம், நாவல் மரம் போன்றவை தெய்வாம்சம் மிக்க மரங்களின் பட்டியலில் உள்ளவை.
அதே போல மரங்களிலும் தீமை மட்டுமே செய்து வாழும் ரெளடி மரங்கள் உண்டு. அத்தகைய மரங்களை ஒழித்தே ஆக வேண்டும்.
நல்லவர்களின் எண்ணிக்கை வைத்தே ஒரு நாட்டிற்கோ, ஒரு நகரின் பகுதிக்கோ, நல்ல பெயரோ கெட்ட பெயரோ கிடைக்கிறது.
அதே போல் நல்ல மரங்களின் எண்ணிக்கை வைத்தே ஒரு நாட்டிற்கு மழை வளமோ, உயிர் வளிப்(Oxygen) பெருக்கமோ, நோயற்ற சூழ்நிலையோ அமைகிறது.
ரெளடிகள் வாழும் பகுதியில் எப்போதும் அடிதடி, சண்டை, குத்து, வெட்டு என்று அமைதியின்மை இருக்கும். அதே போன்று நல்ல மரங்கள் இல்லாத பகுதியில் வறட்சி, வறுமை, நோய் நொடிகள் போன்ற அவல நிலைகள் இருக்கும்.
எனவே ஒரு நாடு உருப்பட வேண்டுமென்றால் ரெளடிகளின் ஆதிக்கம் வளர்வதைத் தடுக்க வேண்டும். அதேபோல் ரெளடி மரங்களாகிய நச்சு மரங்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அவற்றை அடியோடு அழிக்க வேண்டும்.
அப்படி அழிக்கப்பட வேண்டிய நச்சு மரம் பற்றி எச்சரிப்பதே இந்தக் கட்டுரை.தமிழகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் அந்த ரெளடி மரத்திற்கு வேலிக்காத்தான், சீமைக்கருவேலமரம் என்று பல பெயர்கள் உண்டு.
1998-ல் அமெரிக்காவில் பயணம் செய்த காலத்தில் தாவரவியல் பூங்கா ஒன்றைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகில் உள்ள அனைத்து மரங்களையும் வளர்த்து, அந்தந்த மரங்களைப் பற்றிய குறிப்புகளை அவற்றின் அடியில் அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள்.
அந்த தாவர வரிசையில் தற்செயலாய் இந்த வேலிக்காத்தான் என்ற மரத்தைப் பார்க்க நேர்ந்தது. நம் நாடு முழுக்க இந்த மரம் மண்டிக் கிடக்கிறது.ஒரு வேளை இந்த மரத்தினால் பெரிய பயன்கள் ஏதும் இருந்தால் நம் நாட்டிற்குச் சொல்லலாமே என்று கருதி, பேப்பர் - பேனா சகிதமாகப் போய் அந்த மரத்தை பற்றிய குறிப்புகளை வாசிக்க தொடங்கினேன். முதற்குறிப்பை படித்ததுமே அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டேன். அந்தக் குறிப்புகளை அப்படியே தருகிறேன்.

உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறதா, இல்லையா பாருங்கள்.

• வளர்க்க கூடாத நச்சு மரங்களின் பட்டியலில் முதல் இடத்தை வகிப்பது இந்த முள்மரமே.

• எந்த வறட்சியிலும் இந்த மரம் வாடாது. காரணம், நிலத்தடியில் நீர் இல்லையெனில், காற்று மண்டலத்தில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சி வாழும் சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

• காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், இந்த மரம் வளர்ந்துள்ள பகுதிகள் பெரும்பாலும் வறட்சியாகவே இருக்கும். எனவெ அந்த பகுதிகளிள் மழை பெய்யும் அளவு குறையும்.

• தான் வளர்ந்துள்ள நிலத்தை வேறு ஏதும் விளையாத களர்நிலமாக இந்த மரம் மாற்றிவிடும்.இந்த மரம் வளார்ந்துள்ள பகுதிகளிள் உள்ல நிலத்தடி நீர், குடிக்க பயன்படாத நச்சு நீராக மாறிவிடும்.

• இந்த மரத்தின் இலை, காய். விதை போன்றவை எந்த ஓர் உயிரினத்த்ற்கும் உணவாகவோ, வேறு வகையிலோ பயன்படாது.
• இந்த மரத்தின் முள் குத்தினால் அந்த புண் புரை யோடி, நாகப் பாம்பின் நஞ்சைப் போல கொடிய விளைவை ஏற்படுத்தும்.
• இந்த மரத்தின் கீழ் கால்நடைகளைக் கட்டிவைத்தால், அந்தக் கால்நடைகள் விரைவில் மலடாக மாறிவிடும். மீறிக் குட்டி போட்டாலும் உடற்குறையுள்ள குட்டிகளை குட்டிகளையே போடும்.
• இந்த மரத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயிர்வளி மிக மிகக் குறைவு. கரியமல வாயுவோ மிகமிக அதிகம்.
இவைதான் அந்த குறிப்புகள்.
‘வெட்டவெளியில் நின்றாலும் பரவாயில்லை. வேலிக்காத்தானுக்கு அடியில் நிற்காதே !’ என்று கொங்குப் பகுதியில் ஒரு பழமொழியே உண்டு.
கிழக்கு இராமனாதபுரம் பகுதி உருப்படாமல் போவதற்குக் காரணமே அங்கே மண்டிக்கிடக்கும் இந்த வேலிக்காத்தான் மரங்கள்தான்.
ஆலமரம், அரசமரத்தைப் பார்த்தால் மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பல்வேறு பறவைகள் அந்த மரங்களில் கூடு கட்டி, ஆடிப் பாடி 'கிறீச்'சிடும் ஒலியை கேட்கக்கேட்க, நெஞ்சில் அன்பும் கருணையும் பொங்கும்.
அதே வேளையில் இந்த வேலிக்காத்தான் முள் மரத்தடியில் நின்று பாருங்கள். மனத்தில் என்ன உணர்ச்சி தோன்றுகிறது? எந்த பறவையாவது இந்த முள் மரத்தில் கூடுகட்டிக் கொண்டாடுவதைப் பார்க்கமுடியுமா?
தகவல்: கவனகர் முழக்கம்
படித்தது: விசு

Wednesday, September 28, 2005

மகா பாரதத்தில்...

மகா பாரதத்தில் ...
(தருமரும் யக்ஷனும்)
யக்ஷன் : எது தினமும் ஆதித்யனை உதிக்க செய்வது ?
தருமர் : பிரம்மம்
ய : மனிதன் எதனால் எப்போதும் துணையுள்ளவனாகிறான் ?
த : தைரியமே மனிதனுக்குத் துணை
ய : எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாக ஆகிறான் ?
த : எந்த சாஸ்திரமும் படித்தும் அல்ல; பெரியோர்களை அடுத்தே மனிதன் புத்திமானாக ஆகிறான்
ய : பூமியை காட்டிலும் கனமானது எது?
த : மக்களை தாங்கும் தாய் ; பூமியை காட்டிலும் கனமானவள்
ய : ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
த : பிதா
ய : காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?
த : மனம்
ய : புல்லினும் அற்பமானது எது ?
த : கவலை
ய : தேசாந்திரம் போகிறவனுக்கு யார் தோழன் ?
த : வித்தை
ய : வீட்டிலிருப்பவனுக்கு யார் தோழன் ?
த : மனைவி
ய : சாகப்போகிற கிழவனுக்கு யார் நண்பன் ?
த : தானம். அதுதான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிரின் கூடப போகும்.
ய : பாத்திரங்களுக்குள் எது பெரிது?
த : எல்லாவற்றையும் தனக்குள் அடக்கக்கூடிய பெரிய பாத்திரம் பூமி!
ய : எது சுகம் ?
த : சுகம் நல்லோழுக்கத்தில் நிலைபெறுகிறது.
ய : எதை விட்டு பிரிந்தால் மனிதன் எல்லோருக்கும் பிரியமானவாகிறான் ?
த : தன்னை ப் பற்றிய கர்வத்தை விட்டு விட்டால் மனிதன் மற்றவர்களுக்கு பிரியமானவாகிறான்.
ய : எதை இழந்துவிடுவதில் துயரம் இல்லை?
த : கோபத்தை விட்டால் துயரம் அண்டாது.
ய : எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான் ?
த : ஆசையை விட்டால் மனிதன் சம்பத்து ஆகிறான்.
ய : பிராம்மண்யமானது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? படிப்பினாலா? நிச்சயமாக சொல்லு!
த : குலமும் படிப்பும் பிராம்மண்யத்துக்குக் காரணம் அல்ல; ஒழுக்கமே காரணம். ஒழுக்கத்தில் குரைபட்டவன் பிராமணன் ஆகமாட்டான்.எவ்வளவு படித்தவன் ஆனாலும் கெட்ட வழக்கங்களில் சிக்கினவன் பிராமணன் ஆகமாட்டான். நான்கு வேதங்களை ஓதியிருந்தாலும் கெட்ட நடைத்தையுள்ளவன் இழிகுலத்தவன் ஆவான்.
ய : உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
த : நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்கு போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்தும், மிஞ்சி உள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருக்கவேன்டுமென்று விரும்புகிறார்கள், இதுவே பெரிய ஆச்சரியம்.

Tuesday, September 27, 2005

my first step

வணக்கங்கள்