Wednesday, January 25, 2006

சிற்பியைத் தேடும் கல்

'ஒரு ஊருக்குள்
ஆளுயரக் கல்லொன்று
வந்து விழுந்தது!

பஞ்சாயத்து கூடியது!

என்ன செய்வது கல்லை?

'திருநாவுக்கரசரைக்
கல்லில் கட்டிக்
கடலில் போட்டது மாதிரி

நம்மூர் எம்.எல்.ஏ.வை
இக்கல்லில் கட்டிக்
கிணற்றில் போடலாம்
என்றனர் சிலர்.

பஞ்சாயத்துத் திண்ணையிலே
போட்டு வைத்தால்
தலையணை இல்லாத குறை
தீருமென்றார்கள்
கொட்டாவி விட்டுக் கொண்டே சிலர்.

கல்லுக்குக் குங்குமம் வைத்து
சூடம் காட்டி
வழிபடத் துவங்கினான் ஒருவன்!

கல்லை வணங்குகிறவன்
முட்டாள் என்று
கத்திக் கொண்டே
ஓடி வந்தான் இன்னொருவன் !

இருவருக்கும் கைகலப்பு நடந்தது.

புரட்சி செய்யப் போவதாய்
தன்னை அறிவித்துக் கொள்ளும்
ஒருவன்,
'பூர்ஷுவா பூர்ஷுவா' என்று
கல்லை உதைத்தான் !

அவனை சூழ்ந்துக் கொண்டு
சிலர் உதைத்தார்கள் !
கல்லை யார் வீட்டுக்குத்
துணி துவைப்பதற்காக
எடுத்துப் போவதென்று
ஊர்ப் பெண்கள்
குடுமிப் பிடித்தனர் !
கல்லைப் பற்றி
கவிதைப் பாடினார்
ஒரு கவிஞர்.

கல்லைப் பற்றிப் பாடும்
கவிஞனின் மனசு
கல்லாகவே
இருக்குமென்றர்
ஒரு விமர்சகர்.

இருவருக்கும் சண்டை
தொடங்கியது.

அந்த நேரத்தில் ஒரு
சிற்பி வந்தான்.
கல்லை அணுகித் தட்டினான்.
உளி எடுத்தான்.

உளிச்சத்தம் கேட்டு
'ஊர்' சண்டை ஓய்ந்து
வேடிக்கை பார்த்தது !

சில நாழிகையில்
அந்த
ஆளுயரக் கல்லில்
காந்தி சொன்ன
மூன்று குரங்கு பொம்மைகளை
வடித்தான் சிற்பி !

செதுக்கச் செதுக்க
உதிர்ந்த
கல் பொடியைக்
குவித்து
மூட்டை கட்டி
'கோலப் பொடி'
என்று
அதில் எழுதி
வைத்தான்.

புறப்பட்டான் சிற்பி !

ஊர் அதிர்ந்து
நின்றது !

இந்தியாவில் பல
பதவிகள்
இப்படிக்
கற்களாகவே
இருக்கின்றன !
நல்ல சிற்பிகள்
கிடைப்பார்களா?

Tuesday, January 03, 2006

பருக்கை

ஒரு காட்சியைப் பார்த்து அதனால் பிரமித்து அது நமக்குள் நிகழ்த்துகிற மாற்றத்தினால் கிளறப்பட்டு நமது தூரிகையில் நாம் ஒரு ஓவியம் தீட்டுகிறோமோ... அதைப் பற்றித்தான் பேசுகிறேன்.

அச்சுப் போன்று காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல்தான் படைப்பாளியின் மனம். அந்த ஈரத்தை வாழ்வின் உச்சக்கட்டமான வெப்பத்தின் மத்தியிலும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
திரும்ப திரும்ப யோசித்தாலும் மிகச் சில விஷயங்கள்தான் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன.
ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறி விட்டது. எனது மாமா புன்னகையோடு சொன்னார். ..."இந்த பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம் !"

நான் வியப்பாக "ஏன் ?" என்றேன்.

"இந்த பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்துமேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில.. அப்படியினு எத்தனை இடங்கள் ! எங்கேயும் தவறாம அதனோட பயனுக்காக எவ்வளவு தூரம் கடந்து வந்திச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து கடைசி நொடியில தவறி விழுந்துடுச்சே.. எவ்வளவு பாவம் அது...!"

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரிடமிருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் !

- "சினிமாவும் நானும்" என்ற புத்தகத்தில் இயக்குநர் மகேந்திரன்