Wednesday, January 25, 2006

சிற்பியைத் தேடும் கல்

'ஒரு ஊருக்குள்
ஆளுயரக் கல்லொன்று
வந்து விழுந்தது!

பஞ்சாயத்து கூடியது!

என்ன செய்வது கல்லை?

'திருநாவுக்கரசரைக்
கல்லில் கட்டிக்
கடலில் போட்டது மாதிரி

நம்மூர் எம்.எல்.ஏ.வை
இக்கல்லில் கட்டிக்
கிணற்றில் போடலாம்
என்றனர் சிலர்.

பஞ்சாயத்துத் திண்ணையிலே
போட்டு வைத்தால்
தலையணை இல்லாத குறை
தீருமென்றார்கள்
கொட்டாவி விட்டுக் கொண்டே சிலர்.

கல்லுக்குக் குங்குமம் வைத்து
சூடம் காட்டி
வழிபடத் துவங்கினான் ஒருவன்!

கல்லை வணங்குகிறவன்
முட்டாள் என்று
கத்திக் கொண்டே
ஓடி வந்தான் இன்னொருவன் !

இருவருக்கும் கைகலப்பு நடந்தது.

புரட்சி செய்யப் போவதாய்
தன்னை அறிவித்துக் கொள்ளும்
ஒருவன்,
'பூர்ஷுவா பூர்ஷுவா' என்று
கல்லை உதைத்தான் !

அவனை சூழ்ந்துக் கொண்டு
சிலர் உதைத்தார்கள் !
கல்லை யார் வீட்டுக்குத்
துணி துவைப்பதற்காக
எடுத்துப் போவதென்று
ஊர்ப் பெண்கள்
குடுமிப் பிடித்தனர் !
கல்லைப் பற்றி
கவிதைப் பாடினார்
ஒரு கவிஞர்.

கல்லைப் பற்றிப் பாடும்
கவிஞனின் மனசு
கல்லாகவே
இருக்குமென்றர்
ஒரு விமர்சகர்.

இருவருக்கும் சண்டை
தொடங்கியது.

அந்த நேரத்தில் ஒரு
சிற்பி வந்தான்.
கல்லை அணுகித் தட்டினான்.
உளி எடுத்தான்.

உளிச்சத்தம் கேட்டு
'ஊர்' சண்டை ஓய்ந்து
வேடிக்கை பார்த்தது !

சில நாழிகையில்
அந்த
ஆளுயரக் கல்லில்
காந்தி சொன்ன
மூன்று குரங்கு பொம்மைகளை
வடித்தான் சிற்பி !

செதுக்கச் செதுக்க
உதிர்ந்த
கல் பொடியைக்
குவித்து
மூட்டை கட்டி
'கோலப் பொடி'
என்று
அதில் எழுதி
வைத்தான்.

புறப்பட்டான் சிற்பி !

ஊர் அதிர்ந்து
நின்றது !

இந்தியாவில் பல
பதவிகள்
இப்படிக்
கற்களாகவே
இருக்கின்றன !
நல்ல சிற்பிகள்
கிடைப்பார்களா?

5 comments:

NewBee said...

shanevel,

அருமையான எழுத்து. தங்களுடையதா , படித்ததில் பிடித்ததா?

வாழ்த்துகள்.:))

பி.கு.:பின்னூட்டப் பெட்டியில் வேர்ட் வெரிஃபிகேஷன் வேண்டுமா? எல்லாருக்கும் சரி பட்டு வராதுங்களே. :-|

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் - வேல்

முதல் மறுமொழியை வழி மொழிகிறேன். இது யாருடைய கவிதை எனத் தெரியாமல் - மறுமொழி இடக்கூடாதல்லவா ? எழுதியவரைப் புகழ்வதா ? அதனை ரசித்தவரைப் புகழ்வதா ? எப்படியாயினும் கருத்து நன்று

shanevel said...

புதிய தேனீயே...

உனது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

பி.கு: பின்னூட்டபெட்டியில் வேர்ட் வெரிபிகேஷன் எடுத்தாச்சே...!

shanevel said...

யாரைப்புகழினும் சொல்லவந்த கருத்து உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதல்லவா... அதுதான் படைப்பின் வெற்றி..! சீனா ஐயா..!

ஒளியவன் said...

அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள். பதவியெனும் கல்லிருக்க சிலையைச் செய்யாமல் கல்லை உபயோகப் படுத்தி எதிரிகளின் மண்டையை உடைத்து கை கால்களை உடைத்து முடமாக்கி தான் ஒருவனே கல்லுக்குச் சொந்தக் காரன் என்கின்றனர் அரைவேக்காட்டு சிற்பிகள். காலப் போக்கில் தலைக்கருகிலே வைத்திருந்த கல் ஐந்தாண்டுகள் கழித்து தனது தலையிலேயே உருண்டு விழுந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவனை முடமாக்கி விடுகிறது. அவ்வப்பொழுது கல்லை ஆங்கேங்கே நகட்டுவதிலும், தனது பரம்பரையின் வாரிசு பெயர் எழுதுவதற்காகவும் சிதறிடும் பொடிகளை மக்கள் நலனுக்காக தயாரித்தக் கோலமாவு என விளம்பரப் படுத்திக் கொள்வார்கள் இந்த அரைவேக்காட்டுச் சிற்பிகள்!