Saturday, November 05, 2005

மனத்தை அடக்குவதுதான் ...!

"மனத்தை அடக்குவதுதான் எவ்வளவு கடினமானது! பித்துப் பிடித்த குரங்கோடு மனத்தை ஒப்பிடுவது பொருத்தமானதுதான். குரங்குகள் பொதுவாகவே சஞ்சல மனம் படைத்தவை; அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுவதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்! அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதைப் பிடித்துக் கொண்டது. அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும் படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன? மனித மனம் அந்த குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது தீராத சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததினால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கிறது. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கண்டு பொறாமை குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லாப் பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!"
-சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்