Thursday, September 04, 2008

எல்லோரும் நலம் வாழ..


அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார்.
அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது.
தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார்.
“தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்களுக்கு ஆண்டுதோறும் முதல் பரிசு கிடைக்கிறது. ஆனால், அதை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டால், உங்களுக்கு முதல் பரிசு கிடைக்கும் வாய்ப்பு குறைந்துவிடாதா? அவர்களும் உங்களோடு போட்டியில் கலந்து கொள்பவர்கள்தானே!”
அதிகாரியை பார்த்து புன்னகைத்த விவசாயி சொன்னார்.
“இயற்கையாகவே, முற்றின சோளமணிகள் காற்றின் மூலம் பரவி, ஒரு நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்துக்குப் போய் விழும் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! என் வயலைச் சுற்றியுள்ள விவசாயிகள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டிருந்தால், அவை காற்றின் மூலம் என் வயலில் வந்து விழும் வாய்ப்புள்ளது. அப்படி விழுந்தால், கலப்பினப் பெருக்கத்தின் மூலம், என் வயலில் வரும் விளைச்சல் தரம் குறைந்த்தாகி விடாதா? நான் தரமான சோளத்தை விளைவிக்க நான் உதவ வேண்டும் இல்லையா? அதைத்தான் நான் செய்கிறேன்!”
பக்கத்து நிலங்களில் விளையும் சோளத்தின் தரம் மேம்படாவிட்டால், தன் சோளத்தின் தரமும் மேம்படாது என்ற விவசாய அரிச்சுவடியை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார் அந்த விவசாயி!
இந்த விதி விவசாயத்துக்கு மட்டும்தானா?
சமாதானத்தையும் நிம்மதியையும் விரும்பும் ஒருவன், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நிம்மதியாக இருக்க உதவ வேண்டாமா? நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் நன்றாக வாழ உதவ வேண்டாமா? சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவ வேண்டாமா?
வாழ்க்கையில் எந்த ஒருவரது நலனும் மகிழ்ச்சியும் அந்த தனி மனிதரை மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. அது அவரை சுற்றியுள்ளோரின் நலனையும் மகிழ்ச்சியும் பொறுத்தே அமைகிறது.
- “மல்லிகை மகள்- செப்டம்பர்’2008 இதழ்- தலையங்கம்”