Monday, March 23, 2009

படித்து ரசித்த புத்தகங்கள் (1)

ஓடும் நதியின் ஓசை…(இரண்டு பாகங்கள்)

வெ.இறையன்பு இ.ஆ.ப

வெளியீடு: நியு செஞ்சுரி புக்  ஹவுஸ்(பி) லிட்

new photos mar

 

ஆனால் வெளியிட்ட இரண்டு பாகங்களில் முதல் பாகம் மட்டுமே படித்திருக்கிறேன்.

இரண்டாம் பாகமும் அருமையா இருக்கும் என்று படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

முதல் பாகத்தில் ஒரு பகுதி உங்கள் பார்வைக்கு…

உணவும் உணர்வும்

ஒருநாள் காலையில் என் நலனில் அதிக அக்கறை கொண்ட நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.

“காலை உணவைச் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று கேட்டார்.

“இன்று நிறைய எழுதவேண்டியிருந்தது. வாரப்பத்திரிகைக்கு ஒத்துக்கொண்டிருக்கும் கட்டுரைக்கான கெடு இன்றோடு முடிந்துவிட்டது. எனவே சாப்பிட நேரம் கிடைக்கவில்லை.”

“சாப்பிடுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?”

“பத்து நிமிடத்தைக்கூட ஒதுக்க முடியாத அளவு நீங்கள் பிரபலமானவரா?”

அவர்சுட்டிக்காட்டிய உண்மை என்னைச் சுட்டது.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்காவில் பெரிய நூலகங்களிலெல்லாம் வாஷிங்டன், ஜெஃபர்சன், ஃப்ராங்ளின், லிங்கன் போன்றோருடைய புகைப்படங்களை எல்லாம் மாட்டி ‘இவர்கள் ஒரு போதும் காலை உணவைத் தவற விட்டதில்லை’ என்று எழுதிவைத்திருப்பார்கள். அவர்களைக்காட்டிலும் நீங்கள் பெரிய மனிதரா?”

அந்த கேள்வி என்னை வெகுவாக சிந்திக்கவைத்தது.

அதற்கு பிறகு ஒருநாளும் நான் காலை உணவைத் தவற விட்டதில்லை. ‘இரவுக்கும் காலைக்குமான இடைவெளி அதிகம் என்பதால் காலை உணவை மட்டும் விலக்கக்கூடாது. அது உடலை வெகுவாகப் பாதித்துவிடும்’ என்று என்னைக் கேள்வி கேட்ட நண்பரே விளக்கம் சொன்னார். ஒரு வகையில் நாம் உணவைத்தான் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்துகிறோமோ என்ற எண்ணம் எழுகிறது.

பெற்றோர்கள் மீது கோபமா – அதத உணவின் மீது காட்டுகிறோம்.

சகோதரர்களுடன் சண்டையா, சாப்பிடாமலிருக்கிறோம்.

உணவைப் புறக்கணிப்பதன் மூலம் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். சாப்பிடாமலிருப்பது ஒரு சின்ன தற்கொலை; அதன் மூலம் யாரையோ மறைமுகமாக இம்சிக்க நினைக்கிறோம்.

சாப்பிடும்போதே தட்டில் கைகளைக் கழுவி நம் வெறுப்பை உமிழ்கிறோம். சாப்பாடு என்ன செய்யும்? அதற்கும் நம் செய்கைக்கும் என்ன சம்பந்தம். எத்தனை நாட்கள் நாம் ஆற அமர சாப்பிட்டிருக்கிறோம்? ஒவ்வொரு பருக்கையாக ரசித்து ஒவ்வொரு துளியாக ருசித்து விழிப்புணர்வுடன் சாப்பிடும் போது நம்மையே நாம் உணவாக மாற்றிக் கொண்டிருக்கிறோமா?

தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். இதுவரை எத்தனையோ ஆயிரக்கணக்கான வேளைகள் நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் எத்தனை முறை முழுவதுமாக கவன்ம் சிதறாமல், சாப்பிடும் போது தர்க்கம் செய்யாமல், அதிகம் பேசாமல் அமைதியாக ஒவ்வொரு துளியையும் உள்வாங்கிக் கொண்டு ‘இந்த உணவு எனக்குக் கிடைத்ததற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்ற மரியாதை உணர்வோடு நாம் சாப்பிட்டிருப்போம்?

=============================================================

இப்படி போகிறது கட்டுரை… சிந்திக்க வைக்கும் வகையில் பல கட்டுரைகள் இருப்பதால், கண்டிப்பாக இந்த இரண்டு பாகங்களும் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என நம்புகிறேன். பரிசளிக்க அருமையான புத்தகங்களுள் இதுவும் ஒன்று…!

இதை நான் எழுதுவது…

இனி…படித்ததில் பிடித்தது என்று இந்த வலைத்தளத்தில் எழுதுவது விண்டோஸ் லைவ் ரைட்டர் என்கிற வலைத்தள மென்பொருள் மூலம்… இது எப்படி இருக்கும் என்கிற ஆவலுடன் இனிமேல் என்னுடைய வாசிப்பில் படித்ததில் பிடித்தவைகளை… அடிக்கடி பார்க்கலாம்..

 

 

flow3