Wednesday, September 28, 2005

மகா பாரதத்தில்...

மகா பாரதத்தில் ...
(தருமரும் யக்ஷனும்)
யக்ஷன் : எது தினமும் ஆதித்யனை உதிக்க செய்வது ?
தருமர் : பிரம்மம்
ய : மனிதன் எதனால் எப்போதும் துணையுள்ளவனாகிறான் ?
த : தைரியமே மனிதனுக்குத் துணை
ய : எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாக ஆகிறான் ?
த : எந்த சாஸ்திரமும் படித்தும் அல்ல; பெரியோர்களை அடுத்தே மனிதன் புத்திமானாக ஆகிறான்
ய : பூமியை காட்டிலும் கனமானது எது?
த : மக்களை தாங்கும் தாய் ; பூமியை காட்டிலும் கனமானவள்
ய : ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது எது?
த : பிதா
ய : காற்றைக் காட்டிலும் விசை கொண்டது எது?
த : மனம்
ய : புல்லினும் அற்பமானது எது ?
த : கவலை
ய : தேசாந்திரம் போகிறவனுக்கு யார் தோழன் ?
த : வித்தை
ய : வீட்டிலிருப்பவனுக்கு யார் தோழன் ?
த : மனைவி
ய : சாகப்போகிற கிழவனுக்கு யார் நண்பன் ?
த : தானம். அதுதான் மரணத்தின் பின் தனியாகச் செல்லும் உயிரின் கூடப போகும்.
ய : பாத்திரங்களுக்குள் எது பெரிது?
த : எல்லாவற்றையும் தனக்குள் அடக்கக்கூடிய பெரிய பாத்திரம் பூமி!
ய : எது சுகம் ?
த : சுகம் நல்லோழுக்கத்தில் நிலைபெறுகிறது.
ய : எதை விட்டு பிரிந்தால் மனிதன் எல்லோருக்கும் பிரியமானவாகிறான் ?
த : தன்னை ப் பற்றிய கர்வத்தை விட்டு விட்டால் மனிதன் மற்றவர்களுக்கு பிரியமானவாகிறான்.
ய : எதை இழந்துவிடுவதில் துயரம் இல்லை?
த : கோபத்தை விட்டால் துயரம் அண்டாது.
ய : எதை இழந்தால் மனிதன் தனவான் ஆகிறான் ?
த : ஆசையை விட்டால் மனிதன் சம்பத்து ஆகிறான்.
ய : பிராம்மண்யமானது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? படிப்பினாலா? நிச்சயமாக சொல்லு!
த : குலமும் படிப்பும் பிராம்மண்யத்துக்குக் காரணம் அல்ல; ஒழுக்கமே காரணம். ஒழுக்கத்தில் குரைபட்டவன் பிராமணன் ஆகமாட்டான்.எவ்வளவு படித்தவன் ஆனாலும் கெட்ட வழக்கங்களில் சிக்கினவன் பிராமணன் ஆகமாட்டான். நான்கு வேதங்களை ஓதியிருந்தாலும் கெட்ட நடைத்தையுள்ளவன் இழிகுலத்தவன் ஆவான்.
ய : உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?
த : நாள் தோறும் பிராணிகள் யமன் வீட்டுக்கு போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்தும், மிஞ்சி உள்ள மனிதர்கள் தாம் நிலையாக இருக்கவேன்டுமென்று விரும்புகிறார்கள், இதுவே பெரிய ஆச்சரியம்.

No comments: